நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரண் அடைந்த மாணவர் இர்பான், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை, ஒரு போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்பான் மீது புகார் எழுந்தது. அவருடன் 2016ஆம் ஆண்டில் ஒரே கல்லூரியில் படித்த மேலும் 3 பேர் ஆள்மாறாட்ட புகாரில் சிக்க, இர்பான் மட்டும் மொரீசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இர்பான் உட்பட 4 பேருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு, இர்பானின் தந்தை முகமது சபியும், அவரது நண்பரான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரும் மூளையாக செயல்பட்டது அம்பலமானது. முகமது சபி அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்த தகவலை அறிந்த இர்பான், மொரீசியஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இர்பானை, அக்டோபர் 9ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே இடைத்தரகராக செயல்பட்டவர்களில் ஒருவரான வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை பிடித்த சிபிசிஐடி போலீசார், அவரை தேனி கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய தரகரை பிடிக்க மும்பை மற்றும் பெங்களூருவில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், மாணவர் இர்பானின் தந்தை முகமது சபி போலி மருத்துவர் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

முகம்மது சபியிடம் நடத்திய விசாரணையில், 1990 ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் மட்டுமே மருத்துவம் படித்து விட்டு முறையாக பட்டம் பெறாமல், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின் முகம்மது சபியை தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் பன்னீர் செல்வம் முன் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இதை அடுத்து முகமது சபியை 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: மாலா