கராச்சி மைதான சாதனைப் பட்டியலில் தனுஷ்க குணதிலக்க !!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கராச்சி மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர்  தனுஷ்க குணதிலக்க இடம்பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 134 பந்துகளை எதிர்கொண்ட தனுஷ்க குணதிலக்க 16 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 133 ஓட்டங்களை குவித்ததன் மூலமே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கரச்சி மைதனாத்தில் பெறப்பட்ட நான்காவது அதிகூடிய ஓட்டம் இதுவாகும். இதன் மூலம் தனுஷ்க குணதிலக்க ஏற்கனவே 130 ஓட்டங்களுடன் நான்காவது இடத்தில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியாவை முந்தியடித்து இடம்பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் முதல் இடத்திலும் (181), கிரஹாம் கூச் இரண்டாவது இடத்திலும் (142), பாகிஸ்தான் அணியின் சல்மான் பட் மூன்றாவது இடத்திலும் (136) உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: மாலா