ஆசிரியை கொல்லப்பட்டாரா?: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

கம்பளையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை, அவரது முன்னாள் காதலனால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ஹட்டன் சிறிபாத வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் நிசன்சலா ரத்னாயக்க (27) நேற்று முன்தினம் மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அவர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. கடந்த 1ம் திகதி மாலையில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய அவர், சற்று தொலைவிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளார்.

நான்கு நாட்களின் முன்னர் மகாவலி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததையடுத்து பொலிசார் நடத்திய தேடுதலில் நேற்று முன்தினம் சடலம் மீட்கப்பட்டது.

கம்பளையில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது.

அவரது உடலை பெற்றோர் உறுதி செய்தனர்.

நிசன்சலாவிற்கு இம்மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. கம்பளை பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியையே மணக்கவிருந்தார்.

இவரது மரணம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், நிசன்சலாவின் முன்னாள் காதலன் தற்போது பொலிசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார்.

அவர் குறித்து நிசன்சலாவின் தந்தை மரண விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை 5 வருடங்களின் முன்னர் நிசன்சலா காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, நிசன்சலா அந்த காதலில் இருந்து விலகியிருந்தார். எனினும், அடிக்கடி நிசன்சலாவை அவர் தொந்தரவு செய்ததாகவும், மீண்டும் உறவை தொடர வலியுறுத்தி வந்ததாகவும் தந்தையார் குறிப்பிட்டுள்ளார்.

நிசன்சலாவின் திருமணம் அண்மையில் நிச்சயிக்கப்பட்ட பின்னர், அண்மையில் அவரை அச்சுறுத்தியுள்ளார்.

நிசன்சலா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தும் பொலிசார், அவரது முன்னாள் காதலனிடம் வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளதுடன், சம்பவ நாளில் அவரது நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.

Recommended For You

About the Author: ரிஜேடி