கட்சிகளின் கூட்டாச்சி கூட சாத்தியமில்லாத நிலையை நோக்கி நகருகிறதா? கனடிய தேர்தல்க்களம்

இன்னும் நான்கு நாட்களே பரப்புரை உள்ள நிலையிலும், இனிமேல் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும், எந்தவொரு கட்சியும் தனித்துப் பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வென்றுவிடப் போவதில்லை, என்பது திடமாகத் தெளிவாகியுள்ளது. லிபரல் கட்சி தொடர்ந்தும் இறங்கு முகத்திலேயே உள்ளது. அதேவேளை கன்சவேட்டிவ் கட்சியாலும் எவ்வித வளர்ச்சியையும் காட்டமுடியவில்லை என்பதைக் கடந்து, அங்கும் சிறிய இறங்கு முகம் உண்டு. இரு பிரதான கட்சிகளும் 33 சதவீத மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கே தடுமாறுகின்றன. 38 சதவீதத்தை கடந்து மக்கள் ஆதரவைப் பெறவில்லையானால் பெரும்பான்மை சாத்தியமேயில்லை.

இந்நிலையில், கட்சிகள் சேர்ந்தாவது பெரும்பான்மை ஆட்சியமைக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு அமைவதானால் அது எவ்வாறு சாத்தியம்? எனப் பார்ப்போம். முதலில் கியூபெக்கில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்று, பெரும்பான்மை தொகுதிகளை அங்கு வெல்லும் நிலையை நோக்கி நகரும், புளொக் கியூபெக் கட்சி யாருடனும் ஆட்சியில் அணிசேரப்போவதில்லை. அது இன்றைய நிலையில் 35 முதல் 40 தொகுதிகளை வெல்லும் நிலைக்கு, முன்னேறியுள்ளது. அது யாரின் கணக்கிலும் அணிசேர்பிலும் வராது. அடுத்து கனடா தழுவி அதிக தொகுதிகளை வெல்லும் நிலையை, லிபரல் கட்சி நிச்சயம் எட்டப்போவதில்லை. இந்நிலையை கன்சவேட்டிவ் கட்சியே ஈற்றில் எட்டும். அது கூட 140 தொகுதிகளையே தனித்து வெல்லும் நிலையில் இல்லை, என்பதே இன்றைய களயதார்த்தம். இந்நிலையில் இலகுவாக புரிவதானால், கன்சவேட்டிவ் கட்சியும், புளொக் கியூபெக் கட்சியும் வெல்லும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை, 170ஜயோ அல்லது அதற்கு மேற்ப்பட்டோ இருந்தால், வேறு யாரும் இணைந்தோ பெரும்பான்மை ஆட்சியமைக்க மூடியாது. இந்நிலையை நோக்கியே கனடியத் தேர்தல்க்களம் நகருகிறது.

இதைக் கடந்தும், மக்சி பேனியர் வெல்லும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு அமைந்தால் அவரை யாரும் அணிசேர்க்கப் போவதில்லை என்பதுவும் வேறு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவிடயம். என்.டி.பி தொடர்ந்தும் மக்கள் ஆதரவிலும், வெல்லக் கூடிய தொகுதிகள் எண்ணிக்கையிலும், முன்னேறியே வருகிறது. அதேவேளை அம்முன்னேற்றம் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ள, லிபரல் மற்றும் கிறீன் கட்சிகளின் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கையையும், குறைத்து வருகிறது. எனவே அவர்கள் மூவரின் இணைப்பால்க் கூட 170ஜ எட்டமுடியுமா? என்பது பெரும் கேள்வியாவது மட்டுமன்றி, அதற்கான சாத்தியக்கூற்றையும் இல்லை என்றாக்குகிறது. இந்நிலையில் உடனடியாகவே மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள பலரும் தயங்கும் நிலையும் உண்டு. ஏனெனில் அதற்கு மீண்டும் பணம் வேண்டுமே. ஆகவே அதற்கான காலத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் எவ்வாறு காலத்தைக் கடத்தப் போகிறார்கள் என்பதே பெரும் கேள்வி? இந்நிலையில் மாநிலங்கள் ரீதியாக இறுதிக்களநிலை எவ்வாறு அமையலாம் எனத் தொடர்ந்து அடுத்தப் பதிவில்ப்பார்ப்போம்.

-நேரு குணரட்ணம்

Image may contain: one or more people

Recommended For You

About the Author: ஸ்.பரன்