சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உடனடி நிவாரணம் -ஜனாதிபதி பணிப்புரை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்
வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட
மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் நிவாரணப்
பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ள
ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் வெள்ளம்
மற்றும் மண்சரிவினால் 6018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் தற்போது 23 நிவாரண முகாம்களில்
பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அனர்த்த நிலைமைகளைப் பற்றிய தகவல்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
117 என்ற துரித எண்ணுக்கோ 0112 136 136 அல்லது 0112 670 002 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ
அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

Leave a Reply